குதிரை முட்டை என்ற தலைப்பில் சிரிக்க வைக்கும் கதை!
- Get link
- X
- Other Apps
பரமார்த்த குருவும் அவரது முட்டாள் சீடர்களும் எந்தச் செயலைச் செய்தாலும் அதை மற்றவர்கள் கண்டு சிரிப்பார்கள். அப்படி மற்றவர்கள் சிரிப்பதைக் கண்டாலும் தங்களின் முட்டாள் தனத்தை அவர்கள் ஒருபோதும் சிந்தித்துப் பார்த்ததில்லை. ஒருநாள் பரமார்த்த குருவும் அவரது சீடர்களும் நீண்ட நெடும் பயணத்திற்குத் தயாரானார்கள். குருவை எப்பொழுதுமே சீடர்கள் பல்லக்கில் சுமந்து சொல்வார்கள். ஆனால் பரமார்த்த குருவின் உடல் எடை அதிகரித்ததால் பல்லக்கைச் சுமப்பதற்கு சிரமப்பட்டார்கள். சீடர்களில் ஒருவன், "இனிமேல் குருவை நம்மால் சுமந்து செல்ல முடியாது; அதனால் குதிரை ஒன்றை வாங்கி அதன் மேல் குருவை ஏற்றி பயணம் செல்வோம்" என்றான். இதைக் கேட்ட மற்ற சீடர்கள், "அருமையான யோசனை" என்று கூறினர்.
credit: third party image reference
குருவிடம் குதிரை வாங்குவது குறித்துக் கேட்டால் அவர் திட்டுவார் என்பதால், பரமார்த்த குருவுக்கு தெரியாமலேயே குதிரை வாங்க திட்டமிட்டனர். அப்பொழுது ஒரு சீடனுக்கு திடீரென சந்தேகம் ஒன்று எழுந்தது. "குதிரை குட்டி போடுமா? முட்டை இடுமா?" என்று கேட்டான். இதைக் கேட்ட மற்ற சீடர்களும் பதில் தெரியாமல் விழித்தனர். அப்பொழுது அவர்கள் செல்லும் வழியில் குதிரை ஒன்றை மேய்த்துக் கொண்டு ஒரு கிராமவாசி இருந்தார். அவரிடம் சென்று, "ஐயா! எங்கள் குருவைச் சுமந்து செல்ல குதிரை ஒன்று தேவைப்படுகிறது; இந்தக் குதிரையை எங்களுக்குத் தர முடியுமா?" என்று கேட்டனர். அதற்கு அந்த கிராமவாசி, "என்னிடம் ஒரு குதிரை தான் உள்ளது; இதை வைத்து தான் நான் தொழில் செய்ய வேண்டும்" என்று கூறினார். இதைக் கேட்ட சீடர்கள், "ஐயா! எங்களுக்கு ஒரு சந்தேகம்; குதிரை முட்டை இடுமா? அல்லது குட்டி போடுமா? என்று கேட்டனர். சீடர்கள் கேட்ட கேள்வியைப் பார்த்த கிராமவாசி அவர்களிடம் நக்கலாக, "இது கூடத் தெரியாதா? குதிரை முட்டை இடும்" என்று கூறினார். உடனே சீடர்கள், "ஐயா! குதிரை முட்டை எங்கு கிடைக்கும்" என்று கேட்டனர்.
credit: third party image reference
சரியான முட்டாள்களிடம் சிக்கி கொண்டோம் என்று நினைத்த கிராமவாசி அருகிலிருந்த பரங்கிக்காயைக் காட்டி, "இதுதான் குதிரை முட்டை இதை தூக்கி சென்று பத்திரமாக வைத்தால் சிலநாட்களில் இதிலிருந்து குதிரை வரும்" என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டார். அந்தத் தோட்டத்தில் பரங்கிக்காய் நிறைய காய்த்து இருந்தது. இதைப் பார்த்த சீடர்கள், "இங்கு நிறைய குதிரை முட்டைகள் உள்ளன; குருவுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் இந்தக் குதிரை முட்டைகளை எடுத்துச் செல்வோம்; இதனால் நாமும் நடந்து செல்ல வேண்டியதில்லை" என்று சந்தோஷப்பட்டனர். அதனால் ஆளுக்கு ஒரு பரங்கிக்காயைப் பறித்துத் தலையில் சுமந்து சென்றனர். "இந்தக் குதிரை முட்டைகளை உடைத்து விடாமல் ஆசிரமத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்" என்று தமக்குள் பேசிக் கொண்டே சென்றனர். மேலும் குருவுக்குத் தெரியாமல் இதை மறைவாக பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். செல்லும் வழியில் குதிரை முட்டை கிடைத்த அதிர்ஷ்டத்தை பற்றி பேசிக்கொண்டே சென்றனர். இதைக் கேட்ட வழியில் செல்வோர், "இது குதிரை முட்டையா?" என்று இவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே சென்றனர். ஆசிரமத்தில் மறைவாக குதிரை முட்டைகளை வைத்தனர். 20 நாட்களாகியும் எந்த முட்டையில் இருந்தும் குதிரை வரவில்லை. அதனால் ஒரு சீடன், "நான் என் குதிரை முட்டையை உடைத்துப் பார்க்க போகிறேன்" என்று கூறி பரங்கிக்காயை எடுத்து தரையில் போட்டான். அழுகிப்போன பரங்கிக்காய் சிதறியது. இதைப் பார்த்த சீடர்கள், "இது குதிரை முட்டை இல்லை; அந்த கிராமவாசி நம்மை ஏமாற்றிவிட்டான்" என்று கூறி அழுதனர்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment